Monday, March 28, 2011

மனவளம்

சமுதாய பிரச்சனைகளை தீர்க்க மனவளம் காட்டும் தீர்வு

சமுதாய கேடு எங்கிருந்து வருகிறது என்றால் தனி மனித ஒழுக்க கேட்டில் இருந்து தான் வருகிறது.இன்று கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஒழுங்கீனம், திமிர், ஆணவம் அனைத்திற்கும் ஒரு வகையான மூலக் கூறுகள் ஆன்மீகம் அற்ற சமுதாய வாழ்க்கை முறைகள் தான். அதற்காக மூடத்தனமான மதக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறவில்லை.அவ்வாறான பிற்போக்கு தனமான கொள்கைகளை களைந்து அறிவான விஞ்ஞானம் கொண்ட மெய் ஞானத்தை ஆன்மீகத் சாரத்தை வாழ்க்கை நெறியாக கொண்டால் அமைதியான அன்பான பண்பான பகுத்தறிவான மனிதர்களை இந்த சமுதாயம் வழங்கும். தனி மனித அமைதி, ஒரு குடும்பத்தின் அமைதி, ஒரு குடும்பத்தின் அமைதி, ஒரு இனத்தின் அமைதி, ஒரு இனத்தின் அமைதி, ஒரு நாட்டின். அமைதிதான், இந்த உலகத்தின் அமைதியாக மாறும்.

1) இயற்கை விதி,
2) சமுதாய அமைப்பு
3) இன்ப துன்ப உணர்ச்சிகள்

ஆகிய மூன்று கோணங்களின் இணைப்பிலே இந்த வாழ்வு நடைப்பெறுகிறது. இந்த மூன்று துறைகளிலே தெளிவு உண்டானால் அறிவுச் சார்ந்த வாழ்வு புலப்படும். நமக்கு சமுதாய சிக்கலுக்கும் வழியும் தெரியும்.

துன்பம், என்பது சமுதாய துன்பம் மட்டும் அல்ல. தனி மனித துன்பமும்தான் இந்த சமுதாயத்திற்கான துன்பமாக மாறிவிடுகிறது. தனி மனித துன்பங்கள் சங்கிலி தொடர் போல சமுதாய துன்பமாக வீக்கம் பெருகிறது. தனி மனிதனுக்கு வேலை இல்லை என்றால் சமூதாய பிரச்சனைகள் உருவெடுக்க காரணமாகிவிடுகிறது. கொலை கொள்ளை கற்பழிப்பு இங்கிருந்து தான் உற்பதியாகிறது. தனி ஒரு மனிதன் தன்நிலையை உணர்ந்தால் சமுதாய பிரச்சனைகள் களையப்படும். ஒட்டு மொத்த சமுதாயத்தை நாம் திருத்த முடியாது, ஆனால் தனி ஒரு மனிதனின் வளமான வாழ்வு அவனின் அறிவு சார்ந்த உழைப்பு மட்டும் போதுமானதல்ல, அவனின் மன நலமும் உடல் நலமும் வாழ்க்கை நலமும் சிறப்பாக இருக்கவேண்டும்.

உண்மையில் துன்பங்ளுக்கான காரணம் தான் என்ன? மனிதன் நான்கு வித குறைப்பாடுகளால் துன்பமடைகிறான். அமைதியிழந்து அல்லலுறுகிறான்.

1).கடவுளை தேடிக்கொண்டேயிருந்தும் காண முடியாத குறை
2).வறுமை என்னும் பற்றாக்குறை
3).விளைவறியாமலோ, விளைவையறிந்தும் அலச்சியம் செய்தோ, அவமதித்தோ செயலாற்றி அதன் பயனாகத் துன்பம் அனுபவிக்கும் குறை.
4).மனிதனின் சிறப்பறியாமல், பிறர் மீது அச்சமும், பகையும் கொண்டு துன்புறுத்தியும், துன்புற்றும் அல்லலுறும் குறை.

இந்த நான்கு குறைப்பாடுகள் ஒன்றோடு ஒன்று இணைந்து விட்டன. வாழ்க்கை பலவிதமான சிக்கல்களாகி அவற்றை எளிதில் தீர்த்து விடுதலை பெறமுடியாமல் அவற்றுக்கு வழி காணாமல் மனிதன் தவிக்கிறான். வாழ்வின் நலமிழந்து தான் வருந்தியும் பிறரையும் வருத்தியும் வாழ்கிறான்.

அறிவின் நிலைகளை மனிதன் அனுபவமாக அறிந்து கொள்ள வேண்டுமானால் முறையான அக நோக்கும் பயிற்சி அவசியம். மனிதன் மன வளத்தை சரியான முறையில் இயக்க தெரிந்தால் போதும், பெரும்பாலான சமூக பிரச்சனைகள் தீர்ந்த மாதிரிதான்.
அறிவு புத்தி நிலையிலும், சித்த நிலையிலும், பேரறிவு நிலையிலும், சமாதி நிலையான பிரம்ம நிலையிலும் நின்று பயில வேண்டும். பிறகு வேண்டும் போது வேண்டிய படி அறிவை பயன்படுத்தி இனிது வாழ முடியும்.

மனிதனின் பிரச்சனையே மனப் பிரச்சனைதான். மனதை கட்டுப்படுதாமல் மனதிற்கு அடிமை ஆவது தான். மனச்சிக்களில் மாட்டிக் கொண்டு மன அமைதி இழந்து வாழ்ந்து கொண்டிருப்பது தான் இன்றைய நடைமுறையாகிப் போனது. பெருபாலான நமது முக பாவங்களை பாருங்கள், ஒரு விகாரம் தெரியும், ஒரு திமிர் தெரியும், தான் என்ற ஆணவம் தெரியும். இவை எல்லாம் எங்கிருந்து வருகிறது? எல்லாம் அகத்தின் அழகு தானே. அகத்தை சீர் செய்தால் மனதில் தெளிவு உண்டாகும், முகத்திலே அறிவின் ஒளியும் அன்பின் நிலையும் தெரியும்.

பிறந்த எல்லா உயிர்களும் வாழ நினைக்கின்றன. மனிதனும் வாழ நினைக்கின்றான். துன்பமில்லா இன்ப வாழ்வை மட்டு மனிதன் நாடுகிறான்.வாழ்வின் நோக்கதிற்கு முரண்பாடாக வாழ்வு அமையுமானால் அது துன்பம் தரும் . இயற்கையாக கிடைக்க வேண்டிய இன்பம் தடுக்கப்படுகிறது. வாழ்க்கையும் அவ் வாழ்க்கையின் நோக்கத்திற்கேற்ற வாழுகின்ற முறை யாது என்று அறிந்து கொள்வதுதான் அறிவு என்னும் ஞானம்.
தவறிழைப்பது மனம் இனி தவறு செய்து விடக் கூடாது என தீர்மானிப்பது அதே மனம், தவறு செய்யாத வழியை தேர்ந்து ஒழுக வேண்டியதும் அதே மனம். மனதை பழைய நிலையில் வைத்துக் கொண்டு புதிய பாதையில் செல்ல அதற்கு எப்படி முடியும்? கட்டுப்படாத மனம் காட்டு யானைக்கு ஒப்பானது.கட்டுப்ட்ட மனமோ ஆக்க வேலைகளுக்கு உதவும்.

எப்படி இந்த மனதிற்கு பயிற்சி தருவது?

நமது பதிவுகளில் பேராசை, சினம், கடும்பற்றும், முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சகம், என்னும் ஆறு குணங்கள் கூட பழிச்செயல்கள் மூலம் பதிவு பெற்றவைகளே. இவற்றை நாம் மெய் விளக்கத் தவ முறையில் அறுகுணச் சீரமைப்பு என்னும் பயிற்சி மூலம் நமக்கு இருக்கும் பதிவுகளை மாற்றமுடியும்.

உணர்ச்சி நிலையில் உணர்ந்த நிலை
1. பேராசை நிறைமனம்
2. சினம் பொருமை
3. கடும்பற்று ஈகை
4. முறையற்ற பால் கவர்ச்சி கற்பு நெறியாக
5. உயர்வு தாழ்வு சமநோக்கு
6. வஞ்சகம் மன்னிப்பு

அகநோக்கும் பயிற்சியின் மூலம் மனதை உயிரில் ஒடுக்கி உயிர் நிலையறிந்து ஆன்ம உணர்வு முதலில் பெற வேண்டும். இந்த நிலையில் இன்ப துன்ப உணர்வுகளில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் உண்மையை அறிந்த மனிதனுக்கு இந்த உணர்வு பெற்றபின் மனம் உடல் நிலை கடந்து உயிர் நிலையில் நிலைத்துப் பின் உயிர் நிலையும் தாண்டி, தெய்வ நிலையில் லயித்து நிற்கின்ற உயர்பேறு கிட்டுகிறது. செய்கின்ற செயல் எல்லாம் கடமை உணர்வின் கீழ் எல்லோருக்கும் பயனாகும். அறிவே தூய்மையான மெய்பொருளோடு ஒன்றி நிற்கும். இங்கு பழிச்செயல் பதிவுகள் புதிதாகத் தோன்றா. முன்பு இருந்த பதிவுகள் யாவும் அடியோடு முறிந்து போகும். இந்த உண்மையை தான்
“இருள்சேர் இருவினையும்சேரா இறைவனபொருள்சேர்
புகழ் புரிந்தார் மாட்டு”
என்றார் வள்ளுவர்

ஆன்மீகம் என்றவுடன் ஏதோ மதப் போதனை என்று நினைத்துக் கொள்வது எவ்வளவு அறியாமை! எந்த மதமும் ஆன்மீகதோடு தொடர்புடையதுதான்.ஆனால் மதம் மனித சிந்தனைகளை ஏற்று சில கட்டுப்பாடுகளையும் சில கடப்பட்டுகளையும் மனித இனத்தின் மேல் தனது ஆதிக்கத்தை திணிப்பதுதான் மனித சமுதாயத்தில் பல பிரச்சனைகளுக்கு காரணமாகிவிடுகிறது. தன்னை சார்ந்த மதத்தினரையும் தனக்கு எதிரான மதத்தினரையும் தனது கட்டுக்குல் கொண்டு வருவதற்கு முயர்ச்சிப்பதுதான் மதம். எந்த மதத்தில் இல்லை பஞ்சமா பாதகங்கள்? தனது மதக் கொள்கைகளுக்கு எதிரானது என்றால் கலுவேற்றுவது, அவர்களை உயிருடன் எரிப்பது , போர் புரிந்து கொல்வது மற்ற மதத்தினரின் செத்துக்களை கொள்ளை அடிப்பது, கற்பழிப்பது என்று எது முடியுமோ அதை எல்லாம் இறைவன் பெயரில் செயல் படுத்துவது மதம். மனதை பக்குவபடுத்தி மனித நேயத்தை வளர்க்க வேண்டிய மதம் மனிதருக்குள் பிளவை எற்படுத்தி எனது மதம் பெரியது உனது மதம் சிறியது என்று கோட்பாடுகளில் காலத்தை தள்ளிக்கொண்டு இருக்கிறது மதம்.

சில அற்புதமான மஹான்களில் ஆன்ம நேயத்தில் உருவான மத கோட்பாடுகள் காலவோட்டத்தில் ஆன்மீகத்தை மறந்து உலக வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டு பல விஷயங்கள் வெரும் சடங்காகி போனதுதான் வேதனை. மதம் தனது பல வேசங்களை களைந்தால் அற்புதமான ஆன்மீகம் கண்ணுக்கு தெரியும். அற்புதமான மனித நேயம் மிகுந்த வாழ்க்கையும் புரியும்

உயிருள்ள எந்த மனிதனுக்கும் மனம் என்ற உணர்வு இருக்கும் குரங்கு போன்று திரிந்துக் கொண்டிருத ஆன்மாவை உணர்ந்துக் கொள்வதுதான் ஆன்மீகம். ஒவ்வொரு மனிதனும் தன் உயிரும் மனமும் உணர்ந்து தெளிந்து பக்குவபடுத்துவது தான் ஆன்மீகம். ஆன்மீக தேடல் என்பது ஏதோ பிற்போக்கு சிந்தனை என்பது எல்லாம் ஒரு மாயை. மனம் அறிவின் நிலைப்பட்டால், அதுவே பெரிய சீர்திருத்தம் தான்.மனம் அன்பு நிலைப்பட்டால் மகாத்மா என்று பொருள். மனித மனம் ஒரு நிலைப்பட்டால் மகா சக்தி மிக்கது. அன்பு மயமான மனதிற்கு எப்படி வரும் வன்முறை? மனம் அமைதி கொள்பவன் எப்படி பஞ்சமா பாதகங்களில் ஈடுபடுவான்? தனி மனித சீர்திருத்தம் மனதின் அடிப்படையில் இருந்தால் இந்த சமுதாயம் சிறந்த சமுதாயமாக மிளிரும் என்றால் அது மிகையல்ல.
ஒரு நபியை, ஒரு ஏசுவை, புத்தர் பிரானை, வள்ளுவரை திருமூலரை, வள்ளாலரை ,தாயுமானவரை, வேதாத்திரியை போன்று இன்னும் எண்ணற்ற சித்தர்களையும் யோகர்களையும் தந்தது இந்த ஆன்மீக நெறிதான். அந்த ஆன்மீக நெறி ஏன் நமது வாழ்க்கை நெறியாக கூடாது?

சமுதாயத்திலே முதலில் அனைவருக்கும் மன வளத்தை போதிப்போம்; மனதை பண்படுத்துவோம். மனம் சீர்ப்பெற்றாலே மாண்புடன் வாழும் மனிதனை நாம் கண்டுக் கொள்ளலாம்.

இங்கு ஒரு கேள்வி எழும்? மனதை அடக்க தெரிந்த சில சாமியார்கள் ஏன் பெண்ணின்பம் கண்டு அவமானம் படுகிறார்கள்? அடுத்து சிந்திப்போம்.
Posted by sk.manokaran at 10/22/2010 2 comments

No comments: