Tuesday, March 15, 2011

அறிவே ஆலயம்,வாய்மையே வழிபாடு

வேதாத்திரியம் குறித்த சென்ற பதிவைப் படித்த ஓர் அன்பர், இவ்வளவு சிறப்புடைய பெருமகனின் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் போலிருக்கிறது என்று எழுத,அதற்கு,

அப் பெருமகன்,தன்னைத் தெய்வமாக எவர் வழிபடுவதையும் எப்பொழுதும் விரும்பியதில்லை;அவருக்குக் கோயிலும் இல்லை.

மனித அறிவு கூர்தீட்டப்படுவதற்காக அவரது சிந்தனையில் உதித்த அறிவுத்
திருக்கோயில்,பொள்ளாச்சி அருகிலுள்ள ஆழியாறில் உள்ளது.


அறிவை அகண்டமாக்கி விசாலப் பார்வையால் வையத்தை விரிவு செய்வதே அம் மகானுக்குச் செய்யும் மெய்யான வழிபாடாக இருக்கும். என்ற பதிலை நான்
அளித்திருந்தேன்.




அந்தப் பதிலுக்குப் பின்னூட்டமாகப் பெயரில்லாத யாரோ ஒரு அன்பரிடமிருந்து வந்துள்ள அஞ்சல் ,சில அடிப்படையான கேள்விகளை முன் வைத்திருப்பதால் அதைப் பின்னூட்டமாக வெளியிடாமல் தனிப் பதிவிலேயே வெளியிட்டு அவருக்குப் பதிலளிக்க விருப்பம்.


அதை எழுதியதில் அவரது நோக்கம் என்னவாக இருந்தாலும்-அதனால் சில விளக்கங்கள் பலருக்கும் போய்ச் சேர அவரது கடிதம் மறைமுகமாக உதவியிருக்கிறது.


தீமையில் விளையும் நன்மை என்பது..இதுதான்.
முதலில்

வாசகர்களின் பார்வைக்கு அந்தக் கடிதம் பெயரில்லா எழுதியது;
சேம் சைடு கோல் போட்ரேள்.

அவா தம்மை பகவனாப்பாக்காதேன்னுட்டார்.


அப்புறம் நீங்க ஏன் மெய்யான வழிபாடு, திருக்கோயில் என்றெல்லாம் சொல்றேள். அவாளுக்கு இதுதான் நீங்க செய்ற தர்மமா? சொல்லுங்கோ.அப்புறம், அவா கத்துக்கொடுத்த யோகா போன்ற விசயமில்லாம்
இப்போ ரொம்ப் விலைகொடுத்து டிக்கட்டு வாங்கி போய் சேரணும் தெரியுமோ.


அவா இப்போ ரொம்ப பணக்காரளவாக்குத்தான்.

எங்கிட்ட அவ்வளவு காசு இல்லை.


ஏன் பொள்ளாச்சி, எல்லாஊர்லேயும் கட்டிண்டு வரா. தில்லியிலே, பம்பாயிலே.
பெருமகன், திருமகனாக ஆகிவிட்டார். அதாவது, திருவைத்தரும் பெருமகன்.சும்மா எல்லாப்பக்கமும் திரும்பிப்பாருங்கோ. குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரையோட்டினா எப்படி?

தப்பா சொன்னேன்னா மன்னிச்சுக்கோங்கோ.

மேற்குறித்த

அஞ்சலுக்கு என் மறுமொழி

பெயரில்லாமல் கடிதம் எழுதிய அன்பருக்கு......

உங்கள் வருகை சில தெளிவுகளுக்குக் கொண்டு சேர்த்திருப்பதால்-பிறரைத்
தெளிவுபடுத்தப் பயன்படுவதால்..உங்கள் வருகைக்கு முதலில் வாழ்த்துக் கூறுகிறேன்.


வாழ்க வளமுடன்.


1. உங்கள் முதல்

கேள்விக்கான மறுமொழி;(கோயில் மற்றும் வழிபாடு பற்றியது)


முதலில் அறிவுத் திருக்கோயில் என்பது வேதாத்திரி மகரிஷிகளை வழிபடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு புனிதத் தலம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

அவருக்கு எங்குமே சிலைகள் இல்லை;அதனால் பூசை முதலியவைகளும் இல்லை.

அறிவுத் திருக்கோயில் என்பது ஆன்மீகப் பயிற்சி பெறும் ஓர் உள்ளுணர்வுக் கல்வி மையம் மட்டுமே.

மரபு சார்ந்து,கோ+இல் என்பது அரசன் அல்லது இறைவன் உறையும் இடமாகவே கருதப்பட்டு வருகிறது.

அதை அறிவு கொலுவிருக்கும் இடமாகக் கொண்டதாலேயே அறிவுத்
திருக்கோயில் என்ற பெயரை அழகுறச் சூட்டியிருக்கிறார் மகரிஷி.

அறிவுக்கென்று ஒரு கோயில் இந்த அகிலத்தில் அதைத் தவிர வேறெங்குமில்லை.

(அண்மையில் தில்லியில் நடந்த மனவளக் கலைக்கூட்டத்திலே கூட முன்னாள் புலனாய்வுத் துறை இயக்குநர் பத்மஸ்ரீ டி.ஆர்.கார்த்திகேயன் அதைத் தனிச் சிறப்பாகக் குறிப்பிட்டார்)

கோயில்,வழிபாடு ஆகிய சொற்களைக் கேட்டதும் - உடனேயே
அந்த நபருக்குக் கோயில்,அவருக்கு வழிபாடு என்றெல்லாம் நாம்
நினைத்துக் கொண்டுவிடுவதற்குக் காரணம் அவை குறித்து நம்
மூளையில் காலங்காலமாகப் பதிந்து போயிருக்கும் கற்பிதங்களே.

மேலும் அறிவை விரிவுபடுத்துவதும் , விசாலப் பார்வையால் இந்த வையத்தை விரிவு செய்வதுமே மகரிஷிக்குச் செய்யும் வழிபாடு என்றுதான் நான் குறிப்பிட்டிருந்தேன்;அது,கருத்துச் சார்ந்தது என்பதும் புறப் பொருள்கள் சாராதது என்பதும் சொல்லி விளக்க வேண்டியதில்லை.

2.உங்களது அடுத்த வினா,வேதாத்திரிய யோகமுறை ஏதோ காசைக் குறி வைத்து இயங்குவதைப் போலக் குற்றம் சாட்டிக் கிண்டல் செய்யும் தொனியில் உள்ளது.அதற்கு என் பதில்;

இந்தியாவில்,யோகம் சார்ந்த உடற்பயிற்சி,மனப்பயிற்சி(தியானம்)ஆகியவற்றைக் கல்வியாகக் கற்பிக்கும் வேறு நிறுவனங்களோடு
ஒப்பிட்டுப் பார்த்தால்தான் வேதாத்திரிய மனவளக்கலைப் பயிற்சிக்கான கட்டணம் எவ்வளவு குறைவாகப் பெறப்படுகிறது என்பதும் இந்த இயக்கம் சார்ந்த நிறுவனங்களின் தன்னலமற்ற சேவை மனப்பான்மையும் புரியவரும்.

பயிற்சி நிறுவனங்களை இயக்கத் தேவைப்படும் குறைந்த பட்சத் தொகை மட்டுமே இம் மையங்களில் கட்டணமாகப் பெறப்பட்டு வருகிறது.

12 நாட்கள் அடிப்படைப் பயிற்சி பெறுவதற்குரிய கட்டணம் ரூ.500 ஐ விடவும் குறைவானதுதான்.

அடுத்தடுத்த உயர்நிலைப் பயிற்சிகளுக்கான கட்டணம் இன்னும் கூடக் குறைவானதே.

பல சிற்றூர்களிலும்,நகரங்களிலும் தனித் தனியே செயல்பட்டு வரும் மன வளக் கலை மன்றங்களில் மிகவும் குறைவான சிறிய தொகை மட்டுமே பயிற்சிக் கட்டணமாகப் பெறப்பட்டு வருகிறது.

தமிழ் நாட்டின் பல பள்ளிகளிலும் முற்றிலும் இலவசமாகவே மனவளக் கலை பயிற்றுவிக்கப்பட்டுவருகிறதென்பதைத் தாங்கள் அறியவில்லை போலிருக்கிறது.

உலக சமுதாய சேவா சங்கத்தினரால் அறிவுத் திருக்கோயில் வெளியீடுகளாக வெளிவரும் மகரிஷியின் நூல்களின் விலை, கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத அளவுக்குக் குறைவானது.

ஆனால் நூல்களின் உள்ளடக்கம் மிகவும் ஆழமானது.

3.தங்கள் மூன்றாவது வினா,ஆழியாறைத் தவிர வேறு பல இடங்களிலும் ஏற்படுத்தப்பட்டுவரும் அறிவுத் திருக்கோயில்கள் பற்றியது;அதற்கான என் பதில்...

அன்பரே!கேட்டுக் கொள்ளுங்கள்.
அக் கோயில்கள் திருவைச் சேர்ப்பதற்காக அல்ல.
ஆறாம் அறிவிருந்தும் தேறா அறிவாய் இருக்கும் போக்கை மாற்றி அறிவெனும் அகல் விளக்கை ஆங்காங்கே ஏற்றி வைப்பதே அவற்றின் பணி.

ஆழியாறிலுள்ள அறிவுத் திருக்கோயிலை அமைத்த மகரிஷி அவர்கள் , வையகம் வாழ்வாங்கு வாழ நல்லறிவு புகட்டும்
உன்னத அமைப்பாக - வலுவான அடித்தளத்தோடு அதை நிறுவினார்.

அரிதான அவரது சிந்தனைகளைப் பலருக்கும் கொண்டு சேர்க்கும் ஆவலில் உலகின் பல்வேறு இடங்களிலும் வாழும் மனவளக்கலை அன்பர்கள் ஆங்காங்கே மன்றங்களை அமைத்தபோது அவற்றுக்கும் அறிவுத் திருக்கோயில் என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.


மற்றபடி,அவை,வேதாத்திரிய யோகமுறைகளைப் பயிலும் கல்விக் கூடங்கள் மட்டுமே;படாடோபமோ பகட்டோ இல்லாத எளிமையான கட்டிடங்களே
அவற்றில் மிகுதி.

இன்றைய வாழ்முறைக்கேற்ற - சூழ்நிலைக்கேற்ற மனவளப் பயிற்சியை சாதி,இன,மத,மொழி பேதமின்றி...,எந்த ஆரவாரமுமின்றி,அமைதியாய் வழங்கியபடி அவை,சமூகத் தொண்டாற்றி வருகின்றன.

பின் குறிப்பு

பெயரின்றிக் கடிதம் எழுதிய நண்பருக்கு இறுதியாய் ஒரு வேண்டுகோள்.

எந்த ஒரு செய்தியையும் மேலோட்டமாகப் பார்த்துக் கிண்டல் செய்வதை விடுத்துக் குறை நிறைகளை நடுநிலையோடு ஆராய்ந்து பார்த்து எழுதுங்கள்.

தரமான ஆக்கபூர்வமான பின்னூட்டங்களே பயனளிப்பவை என உணர்ந்து கொண்டு கருத்துப்பதிவு செய்யுங்கள்.

மாற்றுக் கருத்துக்கள் கட்டாயம் தேவையானவைதான்.ஆனால் அவற்றை முன் வைக்கும் முறையில் சற்று நாகரிகம் காட்டுங்கள்.

சாதி,மதம்,இனம் ,மொழி முதலிய குறுகிய எல்லைகளைக் கொண்டு மனிதர்களைப் பார்க்காமல்,அவற்றை வைத்து அவர்களை எடைபோடாமல்
அவற்றிலிருந்து வெளியே வாருங்கள்.


எப்படியோ.....உங்கள் பின்னூட்டம் வேதாத்திரியம் பற்றிப் பல செய்திகளைப் பகிர்வதற்கு வாய்ப்பளித்து விட்டது.


அதற்காக

மீண்டும் நன்றி.


இந்தப்

பதிவிற்காவது..’பெயரில்லாதவராக’ப் பின்னூட்டமிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.


ஆன்மீகத் துறையின் ஆழத்தை இவ்வாறான வினாக்களால் நீர்த்துப் போகச் செய்துவிடலாகாது என்பதே என் ஆழ்மன விருப்பம்.

வேதாத்திரி மகரிஷி

No comments: